மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்த இந்தியா
|இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
வதோதரா,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 61 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மந்தனா 4 ரன்களிலும், பிரதிகா ரவால் 18 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இருப்பினும் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 32 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா - ரிச்சா கோஷ் இணை இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. வெறும் 28.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 167 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்த தீப்தி சர்மா 39 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
தீப்தி சர்மா ஆட்ட நாயகியாகவும், ரேனுகா சிங் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.