மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
|இந்த போட்டியின் ஆட்ட நாயகியாக ஹர்லீன் தியோல் தேர்வு செய்யப்பட்டார்.
வதோதரா,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஹர்லீன் தியோல் 115 ரன்களும், பிரதிகா ரவால் 76 ரன்களும், மந்தனா 53 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் மட்டும் தனி ஆளாக போராட மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 46.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 243 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றி அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகியாக ஹர்லீன் தியோல் தேர்வு செய்யப்பட்டார்.