மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
|ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர் 74 ரன்கள் எடுத்தார்.
வெல்லிங்டன்,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்பீல்ட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அலிசா ஹீலி 39 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 14 ரன், பெத் மூனி 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த அன்னபெல் சதர்லேண்ட் மற்றும் ஆஷ்லே கார்ட்னெட் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் அன்னபெல் சதர்லேண்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் அரைசதம் அடித்து அசத்திய ஆஷ்லே கார்ட்னெர் 74 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து களம் புகுந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதில் தஹ்லியா மெக்ராத் 10 ரன், அலனா கிங் 9 ரன், கிம் கார்த் 10 ரன், மேகன் ஸ்கட் 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 290 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர் 74 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.