மகளிர் ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்
|நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேபாளத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தம்புல்லா,
9-வது மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாளம், பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளித்து அதிரடியாக விளையாட முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய நேபாளம் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கபிதா ஜோஷி 31 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாடியா இக்பால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குல் பெரோசாக் மற்றும் முனீபா அலி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த குல் பெரோசாக் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார். வெறும் 11.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்த பாகிஸ்தான் 110 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. முனீபா அலி 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது.