மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய நேபாளம்
|நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக சம்ஜானா கட்கா 72 ரன்கள் குவித்தார்.
தம்புல்லா,
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நேபாளம் அணியின் கேப்டன் இந்து பர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷி சர்மா 36 ரன்கள் அடித்தார். நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக இந்து பர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன சம்ஜானா கட்கா நிலைத்து விளையாடினார். மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. இருப்பினும் சம்ஜானா கட்கா தனி ஆளாக போராடி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
இவரின் பொறுப்பான ஆட்டத்தால் 16.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நேபாளம் 118 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக சம்ஜானா கட்கா 72 ரன்கள் அடித்தார். யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக கவிஷா எகொடகே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.