மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா சிறப்பான பந்துவீச்சு... பாகிஸ்தான் 108 ரன்களில் ஆல் அவுட்
|இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தம்புல்லா,
9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதி கட்டத்தில் பாத்திமா சனா அதிரடியாக விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார்.
19.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், ரேனுகா தாகூர் சிங், ஷ்ரேயங்கா படில் மற்றும் பூஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.