< Back
கிரிக்கெட்
வில்லியம்சன் அபார சதம்...இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

வில்லியம்சன் அபார சதம்...இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

தினத்தந்தி
|
16 Dec 2024 3:09 PM IST

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 156 ரன்கள் எடுத்தார்.

ஹாமில்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 347 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியினர், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ரூட் 32 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 204 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 50 ரன்னுடனும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் ரச்சின் ரவீந்திரா 44 ரன், டேரில் மிட்செல் 60 ரன், பிலிப்ஸ் 3 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடிய வில்லியம்சன் சதம் அடித்த நிலையில் 156 ரன்னில் அவுட் ஆனார்.

தொடர்ந்து களம் இறங்கிய சாண்ட்னெர் 49 ரன், சவுதி 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் 453 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 156 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் சேர்த்து இங்கிலாந்துக்கு 658 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ஜேக் க்ராவ்லி 5 ரன்னிலும், பென் டக்கட் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டை இழந்து 18 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் 9 ரன்னுடனும், ஜோ ரூட் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 640 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்