< Back
கிரிக்கெட்
தோனியை மிஸ் செய்வீர்களா..? ரெய்னாவின் கேள்விக்கு தீபக் சஹார் பதில்
கிரிக்கெட்

தோனியை மிஸ் செய்வீர்களா..? ரெய்னாவின் கேள்விக்கு தீபக் சஹார் பதில்

தினத்தந்தி
|
28 Nov 2024 3:48 PM IST

மும்பையில் விளையாடுவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. இதில் நீண்ட வருடங்களாக ஒரே அணியில் விளையாடி வந்த வீரர்கள் பலர் வேறொரு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்சில் விளையாடி வந்த தீபக் சஹார் மும்பை அணிக்காக வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீபக் சஹார் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். மேலும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிக்கு நெருக்கமானவர். இதனால் தோனியின் ரசிகர்கள் மத்தியில் இவருக்கும் தனியிடம் உண்டு.

இருப்பினும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படும் அவர், கடந்த சீசனில் தொடர் முழுவதும் விளையாட முடியாமல் போனது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தை விட மும்பையில் விளையாடுவது தம்மைப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை அணிக்கு விளையாட செல்வதால் தோனியை நீங்கள் மிஸ் செய்வீர்களா? என்று சுரேஷ் ரெய்னா கேட்டார். அதற்கு யார்தான் தோனியை மிஸ் செய்ய மாட்டார்கள் என்று அவர் பதிலளித்தார்.

இது குறித்து ரெய்னாவிடம் அவர் பேசியது பின்வருமாறு:- "தோனி பாயை யார்தான் மிஸ் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் என்னுடைய தம்பி ராகுல் சஹாரிடம் பேசுவேன். அப்போதெல்லாம் நம்முடைய திறன் அடிப்படையில் நீங்கள் விளையாடும் மும்பை அணிக்கு நான் விளையாட வேண்டும். நான் விளையாடும் சென்னை அணிக்கு நீங்கள் விளையாட வேண்டும் என்று அவரிடம் சொல்வேன்.

ஏனெனில் சென்னையில் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும். மும்பையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும். அவரால் தற்போது சென்னைக்கு வர முடியாது. ஆனால் நான் மும்பைக்கு விளையாட செல்கிறேன். எனவே அது எனக்கு சாதகமாக இருக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்