< Back
கிரிக்கெட்
வெற்றிப்பயணத்தை தொடருமா இந்திய அணி..? வங்காளதேசத்துடன் இன்று மோதல்
கிரிக்கெட்

வெற்றிப்பயணத்தை தொடருமா இந்திய அணி..? வங்காளதேசத்துடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
22 Jun 2024 5:46 AM IST

வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று வங்காளதேசத்துடன் மோதுகிறது.

ஆன்டிகுவா,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. சூப்பர்8 சுற்றில் குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளும், குரூப்-2ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இதில் குரூப்1-ல் இன்று (சனிக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அரங்கேறும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி சூப்பர்8 சுற்றிலும் தனது முதல் ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்தது. சூர்யகுமார் யாதவின் அரைசதமும், ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்து வீச்சும் (3 விக்கெட்) வெற்றியை எளிதாக்கின. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி காணும் போது இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.

இந்திய அணியில் விராட் கோலி- ரோகித் சர்மாவின் தொடக்க கூட்டணி எடுபடவில்லை. கோலியை பின்வரிசைக்கு அனுப்பி விட்டு இடக்கை இளம் புயல் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் முன்னாள் வீரர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அணி நிர்வாகம் ஏற்பது சந்தேகம் தான். மிடில் வரிசையில் ஷிவம் துபேயின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. ஐ பி எல் போன்று மிடில் மற்றும் கடைசி கட்டத்தில் சிக்சர் மழை பொழிவார் என்பதாலேயே சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது பேட்டிங் இதுவரை பெரிய அளவில் இல்லை. இன்றைய ஆட்டத்திலும் சொதப்பினால் அவரது இடம் காலியாகி விடும்.

பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

வங்காளதேச அணி சூப்பர்8 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது. அந்த அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதில் தோற்றால் வெளியேற வேண்டியது தான். இந்த தொடரை பொறுத்தவரை வங்காளதேசத்தின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. தன்சிம் ஹசன் சகிப் (9 விக்கெட்), முஸ்தாபிஜூர் (7), தஸ்கின் அகமது (7), ரிஷாத் ஹூசைன் (9) ஆகியோர் கணிசமாக விக்கெட் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால் பேட்டிங்கில் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை. இத்தகைய குறைபாட்டை சரிசெய்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க தீவிரம் காட்டுவார்கள். வங்காளதேச அணியினர் இந்தியா என்றாலே எப்போதும் வெறிகொண்டு ஆடுவது உண்டு. அதனால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

20 ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ்.

வங்காளதேசம்: தன்சித் ஹசன், லிட்டான் தாஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), ரிஷாப் ஹூசைன், தவ்ஹித் ஹிரிடாய், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சகிப், முஸ்தாபிஜூர் ரகுமான்.

மற்றொரு ஆட்டம்

இதே பிரிவில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் கிங்ஸ்டவுனில் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும் இந்திய நேரப்படி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தான் தெரியும். ஏற்கனவே வங்காளதேசத்தை போட்டுத் தாக்கிய ஆஸ்திரேலியா 2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளது. ரஷித்கான், முகமது நபி, நூர் அகமது என்று சுழல்பட்டாளத்தை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அதன் மூலம் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஜாலத்துக்கு முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை ஒரு போதும் வீழ்த்தியதில்லை. அந்த அணிக்கு எதிராக ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் (4 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) தோல்வியே கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்