< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவில் ரோகித்தை விட கோலி அதிகம் கொண்டாடப்படுவது ஏன்..? - ஆகாஷ் சோப்ரா விளக்கம்
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் ரோகித்தை விட கோலி அதிகம் கொண்டாடப்படுவது ஏன்..? - ஆகாஷ் சோப்ரா விளக்கம்

தினத்தந்தி
|
15 Nov 2024 9:25 PM IST

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் விராட் கோலியை விளம்பரங்களில் முன்னிலைப்படுத்தி வருகின்றன.

மும்பை,

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் விராட் கோலியை விளம்பரங்களில் முன்னிலைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் அருகே இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருக்க வேண்டிய இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.

அதற்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நீங்கள் மரியாதை பெற வேண்டுமெனில் அதற்கு அங்கே டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அங்கே நீங்கள் எவ்வளவு அசத்தினாலும் மரியாதை பெற மாட்டீர்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் அவர்களுக்கு எதிராக பேட்டிங் அல்லது பந்து வீச்சில் அசத்தினால் அவர்கள் உங்களை நினைவில் வைத்திருப்பார்கள். நீங்கள் அவர்களுடைய வரலாற்றில் எழுதப்படுவீர்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ரோகித் சர்மா மகத்தானவர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அவர் இதுவரை ஒரு முறை கூட ஆஸ்திரேலியாவில் முழுமையாக டெஸ்ட் தொடரில் விளையாடியதில்லை. அதனால் அவர் அங்கே அந்தஸ்தை பெறாமல் இருக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் நீங்கள் அசத்தினால் அங்குள்ளவர்கள்தான் முதலில் உங்களுக்கு எழுந்து நின்று பாராட்டுவார்கள். சொல்லப்போனால் அவர்கள் உங்களுக்கு தலை வணங்குவார்கள். அதை சச்சின் டெண்டுல்கருக்கு அவர்கள் கொடுத்து பார்த்துள்ளோம். எனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நீங்கள் மரியாதை பெற வேண்டுமெனில் அங்கே பேட்டிங் அல்லது பந்துவீச்சில் அசத்த வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்