ரிஷப் பண்டை 'முட்டாள்' என விமர்சித்தது ஏன்..? கவாஸ்கர் விளக்கம்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 -வது டெஸ்டின்போது ரிஷப் பண்டை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது.
முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த முறை மேட்ச் வின்னராக திகழ்ந்த அவர் இம்முறை சொதப்பி வருகிறார். குறிப்பாக நடப்பு தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணிக்கு முக்கியமான தருணத்தில் தேவையின்றி அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார். அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு காரணமான அவரை அந்த போட்டியில் 'முட்டாள்.. முட்டாள்' என்று சுனில் கவாஸ்கர் நேரலையில் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட்டை விமர்சித்ததற்கான காரணம் பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் இந்த விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும்தான் என்னை உருவாக்கியது. எனவே ரிஷப் பண்ட் போன்ற திறமையானவர் அப்படி அவுட்டானதை பார்த்தது ஏமாற்றமாக அமைந்தது. அதற்கு முந்தைய பந்தில் அவர் விளையாடியதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அடுத்த பந்தில் அவர் அப்படி அவுட்டானதற்கு ஈகோதான் காரணம். டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு சுலபமல்ல. அவருக்காக இரண்டு புறங்களிலும் ஆஸ்திரேலியா பீல்டர்களை நிறுத்தி இருந்தது. அது தெரிந்தும் ரிஷப் பண்ட் தன்னுடைய விக்கெட்டை கொடுத்தார்.
இதற்கு முன் அவர் அற்புதமான ஆட்டங்களை விளையாடி நான் பார்த்துள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இப்படி அடித்தால்தான் ரன்கள் அடிக்க முடியும் என்று அவர் சிந்திப்பது போல் தெரிகிறது. அவர் இறங்கி சென்று பந்தை தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்ப முயற்சிக்கிறார். ஆனால் கடந்த காலங்களில் அவர் அப்படி மட்டுமே விளையாடவில்லை. கவர் ட்ரைவ், ஸ்கொயர் கட், புல் ஷாட், பிளிக் ஆப் போன்ற அனைத்து வகையான ஷாட்டுகளும் அவரிடம் இருக்கிறது. ஒருவேளை அந்த பந்து சிக்சர் போயிருந்தால் நானே அவரை பாராட்டியிருப்பேன். ஆனால் அங்கே நீங்கள் கொஞ்சமும் கவலையின்றி பேட்டை சுழற்றி அவுட்டானீர்கள்" என்று கூறினார்.