< Back
கிரிக்கெட்
அவர் ஏன் தனக்காக விளையாடினார்..? - பாண்ட்யாவை கடுமையாக விமர்சித்த பாக். முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

அவர் ஏன் தனக்காக விளையாடினார்..? - பாண்ட்யாவை கடுமையாக விமர்சித்த பாக். முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
11 Nov 2024 6:26 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாண்ட்யா 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

கெபேஹா,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் என்ற கவுரமான நிலையை எட்டியது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி கடும் நெருக்கடி கொடுத்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த ஜெரால்ட் கோட்ஸி (9 பந்துகளில் 19 ரன்கள்) அதிரடியாக விளையாடி அழுத்தத்தை குறைத்தார். 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 47 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினார்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் அர்ஷ்தீப்புக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் பாண்ட்யா சுயநலத்துடன் விளையாடியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த பாண்டியா அவுட்டாகாமல் தமக்காக விளையாடினார். அவர் ஏன் தனக்காக விளையாடினார்? அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட தயாராகிறார் என்று நினைக்கிறேன். அவர் விளையாடிய விதத்தை பார்த்தது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அவர் சிங்கிள் கூட எடுக்கவில்லை. அர்ஷ்தீப் சிங் சிக்ஸர் அடித்தார். பாண்டியா சிங்கிள்களை தவிர்ப்பதற்கு இந்தியா ஒன்றும் அந்த நேரத்தில் 9 விக்கட்டுகளை இழந்து விடவில்லை. 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திந்திருந்தது. எனவே அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்