பிரிவு உபசார போட்டி வேண்டாமென்று ஓய்வு பெற்றது ஏன்..? அஸ்வின் விளக்கம்
|அஸ்வினுக்கு பிரிவு உபசார போட்டி வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என கபில்தேவ் கூறியிருந்தார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 765 விக்கெட் வீழ்த்தியவரான அஸ்வினுக்கு பிரிவு உபசார போட்டி வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர் என இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரிவு உபசார போட்டியை (பேர்வெல் போட்டி) விரும்பாததாலேயே தாம் இப்படி ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"என்னைப் பொறுத்த வரை பிரமாண்டமான பிரியாவிடைகள் தவறானது. நீங்கள் யாருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் கெரியரின் இறுதியில் யாரும் ஒரு துளி கண்ணீர் விடுவதை நான் விரும்பவில்லை. பேர்வெல் என்பது நட்சத்திர கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன். நாம் ஏன் ஒருவருடைய பின்னே செல்ல வேண்டும்? அவர்கள் மீது இருக்கும் அன்பை பற்றி நான் புரிந்து கொள்கிறேன்.
ஆனால் உண்மையில் அந்த நபர்களின் சாதனைகள், மரபு ஆகியவை மட்டுமே உத்வேகமாக எடுத்துக்கொள்ளபட வேண்டும். பேர்வெல் என்பது தவறானது. என்னைக் கொண்டாடும் வகையில் ஒரு போட்டி நடத்தப்பட்டால் அது விளையாட்டுக்கு அவமதிப்பு என்று நினைக்கிறேன். ஓய்வு மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளுக்காக மகிழ்ச்சியாக இல்லையென்றால் பின்னர் எதற்குத்தான் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்?
இனிமேலும் விளையாடாமல் விடை பெறுவதில் ஏன் வருத்தமாக இருக்க வேண்டும்?. வாழ்க்கையில் இந்தப் பகுதியை மட்டுமே விட்டுள்ளேன். இப்போதும் கிரிக்கெட்டை பற்றி யூடியூபில் பேசுவேன். பயிற்சி கொடுப்பதை விரும்புவேன். அப்படி கிரிக்கெட்டை சுற்றி என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஓய்வு பெற்றதற்காக வருத்தமும் இல்லை. யார் மீதும் கோபமும் இல்லை. துளியளவும் அழவில்லை. எனது ஓய்வுக்கு யாரும் பொறுப்பும் கிடையாது" எனக் கூறினார்.