உங்கள் அணியில் விளையாடுவதற்கு தகுதியான இந்திய வீரர் யார்..? - கம்மின்ஸ் கிண்டல் பதில்
|ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தகுதியான ஒரு இந்திய வீரர் யார்? என்று கேட்கப்பட்டது.
பெர்த்,
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த தொடர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் -கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனால் தொடர்ந்து 3-வது முறையாக வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று கேப்டன் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சூளுரைத்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தகுதியான ஒரு இந்திய வீரர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு இந்திய அணியில் அப்படி ஒரு வீரர் யாருமே இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கிண்டலாக பதிலளித்தார்.
இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு:- "யாருமில்லை" என்று சற்றும் யோசிக்காமல் கூறினார்.
இருப்பினும் அதே நிகழ்ச்சியில் நாதன் லயன் பேசியது பின்வருமாறு:- "ஸ்மித், லாபுசாக்னே ஆகியோருடன் விராட் கோலியும் இருந்தால் எங்களுடைய டாப் ஆர்டர் வலுவாக இருக்கும்" என்று கூறினார்.
ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் தேர்ந்தெடுத்தது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் 5வது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சரியானவர். இளம் வீரரான அவர் இலகுவான இதயம் கொண்டவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அவர் என்னுடைய கேப்டன்" என்று கூறினார்.
அதே போல டிராவிஸ் ஹெட் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்து பேசியது பின்வருமாறு:- "நான் டாப் ஆர்டரில் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுப்பேன். அவருடைய ஆட்டம் அதிரடியாக இருக்கும்" என்று கூறினார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலந்து, " நான் பும்ராவை தேர்ந்தெடுப்பேன். அவர் 3 வடிவ வீரர் மற்றும் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்" என்று கூறினார்.