< Back
கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை..?
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை..?

தினத்தந்தி
|
10 Dec 2024 12:46 PM IST

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

சென்னை,

3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்சில் நடக்கும் இதன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இரு அணிகள் எவை? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு போட்டி நிலவுகிறது. இந்த வாய்ப்பில் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முன்னணியில் உள்ளன.

மொத்தம் உள்ள 9 அணிகளின் வாய்ப்புகள் குறித்து இங்கு காண்போம்.

1. தென் ஆப்பிரிக்கா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் (63.33 சதவீதம்) முதலிடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (2 போட்டிகள்) வெற்றி பெற்றால் எளிதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தால் மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டிருக்கும்.

2. ஆஸ்திரேலியா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 60.71 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை கைப்பற்றினாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். தோல்வியடைந்தாலும் அடுத்து நடைபெறும் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றினாலே போதும் எந்த வித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

மாறாக 2 தொடர்களிலும் தோல்வியை தழுவினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் உருவாகும்.

3. இந்தியா:- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 57.29 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளையும் கட்டாயம் வென்றாக வேண்டும். ஒன்றில் தோல்வியைந்தாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.

4. இலங்கை: தற்போது 45.45 சதவீத புள்ளிகளுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள இலங்கை சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை வென்றால் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும். மேலும் மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டியது அவசியமாகும்.

5. இங்கிலாந்து: தற்போது 45.24 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்துக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று

மற்ற அணிகளின் முடிவுகளும் இங்கிலாந்துக்கு ஏற்ப அமைந்தால் இறுதிப்போட்டியை பற்றி நினைத்து பார்க்கலாம்.

நியூசிலாந்து (44.23 சதவீதம்), பாகிஸ்தான் (33.33 சதவீதம்), வங்காளதேசம் (31.25 சதவீதம்) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டன.

மேலும் செய்திகள்