முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்வது எப்போது..? வெளியான தகவல்
|முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை.
தற்போது கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனால் அவர் விரைவில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியினுடன் இணைவார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனால் பிசிசிஐ, முகமது ஷமியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் பிசிசிஐ மருத்துவக்குழு ராஜ்கோட்டிற்கு சென்று அங்கு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடி வரும் முகமது ஷமியின் உடற்தகுதியை கண்காணித்தது.
இந்நிலையில் முகமது ஷமி உடனடியாக (3-வது போட்டிக்கு முன்) ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 4 மற்றும் 5-வது போட்டிகளில் இந்திய அணிக்கு தேர்வாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.