< Back
கிரிக்கெட்
அஸ்வின் கையில் பந்தை எடுத்ததும் கிறிஸ் கெயிலின் கால்கள்... - இந்திய முன்னாள் கேப்டன்

image courtesy: PTI

கிரிக்கெட்

அஸ்வின் கையில் பந்தை எடுத்ததும் கிறிஸ் கெயிலின் கால்கள்... - இந்திய முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
20 March 2025 8:25 AM IST

18-வது ஐ.பி.எல். சீசனில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சென்னை,

சென்னை, மும்பை, கொல்கத்தா பெங்களூரு உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அரங்கேறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அடுத்த நாள் (23-ந் தேதி) சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

முன்னதாக இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. இவர் கடந்த காலங்களில் தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடியுள்ளார். தற்போது மீண்டும் சென்னை அணியில் விளையாட இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சமீபத்தில் கூறினார்.

கடந்த 2011 ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயிலை டக் அவுட் ஆக்கிய அஸ்வின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் அந்த போட்டியில் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் 2011-ல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கிறிஸ் கெயிலை அவுட்டாக்கிய அஸ்வின் சென்னையை வெற்றி பெற வைத்ததாக இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கிறிஸ் கெயில் யார் பந்துவீச்சை வேண்டுமானாலும் சிக்சர், பவுண்டரி அடிப்பார். ஆனால் அவரை அவுட்டாக்க அஸ்வினுக்கு 4பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன. அஸ்வின் பந்தை கையில் எடுத்ததும், கெய்லின் கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. அவரை ஒரு சிறந்த டி20 பந்து வீச்சாளராக அடையாளம் காட்டியவர் தோனி. அஸ்வின் டி20யில் இருந்து ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் என அற்புதமான முறையில் பரிணமித்துள்ளார். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர் மட்டுமல்ல, சிறந்த பேட்ஸ்மேனும் கூட" என்று கூறினார்.


மேலும் செய்திகள்