பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன..? - கங்குலி விளக்கம்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த தொடர் முழுவதுமே நமது அணி சரியாக பேட்டிங் செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களால் போட்டிகளை வெல்ல முடியாது. அதிலும் குறிப்பாக 170 - 180 ரன்கள் அடித்துவிட்டு டெஸ்ட் போட்டிகளை வெல்வது என்பது எளிதான ஒன்று கிடையாது. குறைந்தபட்சம் 350-400 ரன்கள் வரை அடித்தால்தான் போட்டிகளை வெற்றி பெற முடியும். இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்ல முடியாது. அனைவருமே ரன்களை அடித்திருக்க வேண்டும். ஆனால் அதனை நமது வீரர்கள் செய்ய தவறிவிட்டனர்" என்று கூறினார்.