< Back
கிரிக்கெட்
டிராவிஸ் ஹெட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது பொய் - சிராஜ் ஆதங்கம்
கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது பொய் - சிராஜ் ஆதங்கம்

தினத்தந்தி
|
8 Dec 2024 12:53 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் -ஹெட் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடிலெய்டு,

இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் அதனை ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். மேலும் அவரை நோக்கி "வெளியே செல்லுங்கள்" என்ற வகையில் சைகை செய்தார். இதனால் அவர்களுக்குள் சிறிது வார்த்தை மோதல் ஏற்பட்டது.

அதன் பின் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் "நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்" என்றுதான் சிராஜிடம் தாம் சொன்னதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அதை சிராஜ் வேறு விதமாக புரிந்து கொண்டு அப்படி செய்தது ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த சூழ்நிலையில் விக்கெட்டை எடுத்தபோது வெறித்தனமாக கொண்டாடிய தம்மிடம் ஹெட் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். அதனாலேயே பதிலுக்குத் தாம் அவ்வாறு செய்ததாக சிராஜ் கூறியுள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது உண்மையல்ல என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவருக்கு எதிராக நான் மகிழ்ச்சியுடன் பந்து வீசினேன். ஏனெனில் அது நல்ல போட்டியாக இருந்தது. அதனாலேயே நான் அவரை அவுட்டாக்கிய பின் அப்படி கொண்டாடினேன். ஆனால் அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

இருப்பினும் அவர், 'நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்' என்று என்னிடம் சொல்லியதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பொய் சொன்னார். நாங்கள் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால் அவர் செய்தது தவறு" என்று கூறினார்.

மேலும் செய்திகள்