< Back
கிரிக்கெட்
மைக்கேல் வாகன் கூறியது உண்மை ... பாகிஸ்தான் அணியை விட ஐ.பி.எல்.தொடர் தரமானதுதான் - கம்ரான் அக்மல்
கிரிக்கெட்

மைக்கேல் வாகன் கூறியது உண்மை ... பாகிஸ்தான் அணியை விட ஐ.பி.எல்.தொடர் தரமானதுதான் - கம்ரான் அக்மல்

தினத்தந்தி
|
31 May 2024 10:47 AM IST

அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்று கம்ரான் அக்மல் சோகத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

கராச்சி,

டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் மற்றும் 3-வது போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

முன்னதாக இந்தத் தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறினார்கள். குறிப்பாக ஜோஸ் பட்லர், மொயின் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜேக்ஸ் போன்ற வீரர்கள் வெளியேறியது ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் ஒன்று முழுமையாக விளையாடுங்கள் இல்லையெனில் ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என்று இர்பான் பதான் கடுமையாக விமர்சித்தார். அதேபோல முழுமையாக விளையாடுவதாக சொல்லி விட்டு பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.

இருப்பினும் நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். அதே சமயம் சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை விட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு பாகிஸ்தானை சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் அவ்வாறு கூறியது உண்மைதான் என்று கம்ரான் அக்மல் சோகத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அது மிகவும் வலியை கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என்று நினைக்கிறேன். அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம். எனவே பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என்று மைக்கேல் வாகன் தெரிவித்தார்.

அதனால் தவறு நம்முடையது. ஒருவேளை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்கே 40000 - 50000 ரசிகர்களுக்கு முன்னிலையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான தரமான கிரிக்கெட்டாகும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்