< Back
கிரிக்கெட்
முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது..? ரவி சாஸ்திரி கேள்வி
கிரிக்கெட்

முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது..? ரவி சாஸ்திரி கேள்வி

தினத்தந்தி
|
7 Jan 2025 12:29 PM IST

முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடியிருந்தார். அந்த தொடருக்கு பின்னர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட வந்த அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி உள்ளூர் தொடர்களில் களமிறங்கி சிறப்பான வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த நவம்பரில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஷமி 43 ஓவர்கள் பந்து வீசினார். இதைத் தொடர்ந்து, சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரிலும் தொடர்ந்து விளையாடினார். அங்கு டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராகும் பொருட்டு தனது பந்துவீச்சு அளவை அதிகரிக்க அவர் கூடுதலாக பயிற்சியில் ஈடுபட்டார்.

இதனால் அவர் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான அணியினுடன் இணைவார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் நீண்ட நாட்கள் கழித்து விளையாடிய பணிச்சுமை காரணமாக இடது முழங்காலில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் விளையாட முடியாமல் போனது.

இந்நிலையில் முகமது ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு திரும்புவார்? என்று பி.சி.சி.ஐ.க்கு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது? என்பது எனக்கு புரியவில்லை. ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் முகமது ஷமி இந்திய அணிக்கு பெரிய பங்கினை வழங்கக்கூடியவர். அவரை இவ்வளவு மாதங்களாக கண்காணித்து வரும் மருத்துவ குழுவால் ஏன் இன்னும் அவரது காயத்தை முழுமையாக சரி செய்ய முடியவில்லை. அவரது விஷயத்தில் பி.சிசி.ஐ. எந்த ஒரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்கள்தான் முகமது ஷமியை கண்காணித்து விரைவில் குணப்படுத்தியிருக்க வேண்டும்.

முகமது ஷமி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உள்ளூர் தொடரில் முகமது ஷமி விளையாடி வந்தாலும் அவர் தேசிய அணிக்கு திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் புரியாமல் இருக்கிறது. பி.சி.சி.ஐ. அவர் விஷயத்தில் என்ன நினைக்கிறது? என்பது எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்