பாகிஸ்தானில் கிரிக்கெட்டுக்கு என்னவாயிற்று..?- கெவின் பீட்டர்சன்
|வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது.
லண்டன்,
பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.
சமீப காலமாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிஎஸ்எல் தொடரில் தாம் விளையாடிய காலங்களில் பாகிஸ்தான் சிறப்பாக இருந்ததாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பாகிஸ்தான் இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது தமக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு என்னாச்சி? அங்கே நான் பிஎஸ்எல் தொடரில் விளையாடியபோது அத்தொடரின் தரம் அற்புதமாக இருந்தது. வீரர்கள் நல்ல வேலை நெறிமுறைகளை பின்பற்றினார்கள். இளம் வீரர்களிடம் மேஜிக் போன்ற செயல்பாடுகள் வெளிப்பட்டது. தற்போது அங்கே என்ன நடக்கிறது?" என்று பதிவிட்டுள்ளார்.