என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? - முகமது ஷமி ஆதங்கம்
|வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை நிரூபித்துக் கொண்டுதான் இருந்தேன் என முகமது ஷமி கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி உள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அந்த உலகக்கோப்பை தொடரில் ஷமி 4 போட்டிகளில் விளையாடி 14 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
ஆனாலும் அவருக்கு அந்த தொடரின் முதல் சில ஆட்டங்களிலும், இறுதி நேரத்திலும் (கடைசி லீக் மற்றும் அரையிறுதி ஆட்டம்) வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2019 உலகக்கோப்பை ஆட்டத்தில் தன்னை சில போட்டிகளில் தேர்வு செய்யப்படாதது குறித்து தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ள முகமது ஷமி கூறியதாவது,
2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் நான் விளையாடவில்லை. பின்னர் எனக்கு கிடைத்த வாய்ப்பில் அடுத்தடுத்த போட்டிகளில் பல விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன். அதேபோன்று 2023-ஆம் ஆண்டும் என்னால் சிறப்பாக விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டும் எனக்கு எதிர்பார்த்த அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதிலும் குறிப்பாக 3 போட்டிடிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று தெரியவில்லை. என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை. பதிலும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை நிரூபித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிரூபிக்க தான் முடியும். ஆனாலும் 2019 உலகக்கோப்பை தொடரில் என்னை தொடர்ந்து விளையாட வைக்காதது ஏமாற்றம் அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.