ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியது என்ன..?
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா, தனது 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் டிராவிஸ் ஹெட் (89 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (47 ரன்கள்) போராடியும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 238 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை தொடங்கியுள்ளது. அபாரமாக பந்து வீசிய இந்தியா தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் அள்ளிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு இதே மைதானத்தில் விளையாடியபோது பிட்ச் எப்படி இருந்தது என்பதை வைத்து இப்போட்டிக்கான திட்டத்தை அமைத்ததாக பும்ரா கூறியுள்ளார்.
இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:- "மிகவும் மகிழ்ச்சி. முதல் இன்னிங்சில் அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட நாங்கள் அதற்கு பதிலடி கொடுத்த விதம் சிறப்பாக இருந்தது. 2018-ம் ஆண்டு நான் இங்கே விளையாடினேன். அப்போது பிட்ச் மிருதுவாக இருந்தது நினைவிருக்கிறது. எனவே இந்த போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாரானோம். அனைவரும் தங்களுடைய திறமையை நம்புமாறு எங்கள் வீரர்களிடம் கூறினேன்.
இது ஜெய்ஸ்வாலுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ். அவர் நன்றாக விளையாடினார். விராட் கோலி எப்போதும் பார்ம் இல்லாமல் இருந்ததில்லை. கடினமான பிட்ச்களில் அவரைப் போன்ற வீரரை மதிப்பிடுவது கடினம். ஆனால் வலைப்பயிற்சியில் அவர் நன்றாக செயல்பட்டார். ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவால் நாங்கள் நன்றாக உணர்ந்தோம்" என்று கூறினார்.