இந்த உலகக்கோப்பையில் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுவோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்
|மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 4ம் தேதி நியூசிலாந்தை துபாயில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 6-ல் துபாயில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுவோம் என இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இதுபோன்ற உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் எப்போது விளையாடினாலும் சிறப்பாகவே செயல்பட விரும்புகிறோம்.
யு.ஏ.இ-யில் உள்ள சீதோஷ்ண நிலை நமது நாட்டை போலவே இருக்கும். அங்குள்ள ஆடுகளத்தன்மை மற்றும் சூழல் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு தகுந்தபடி எங்களை விரைவாக மாற்றிக்கொள்ள முயற்சிப்போம்.
ஒரு அணியாக நாங்கள் தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டதை வைத்து, எங்களது பின்னடைவுக்கு காரணமாக தடைகளை முறியடிப்போம். இந்த உலகக் கோப்பையில் நாங்கள் எல்லா துறையிலும் சிறப்பாக செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.