< Back
கிரிக்கெட்
இந்த போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் - நியூசிலாந்து வீரர்
கிரிக்கெட்

இந்த போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் - நியூசிலாந்து வீரர்

தினத்தந்தி
|
3 Nov 2024 8:53 AM IST

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து வில் யங் (71 ரன்), டேரில் மிட்செல் (82 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2ம் நாள் முடிவில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. அஜாஸ் படேல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து இதுவரை 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் மும்பை பிட்ச் எந்த பக்கமாக சுழல்கிறது என்று தங்களாலேயே கணிக்க முடியவில்லை என நியூசிலாந்து ஸ்பின்னர் அஜாஸ் படேல் கூறியுள்ளார். அதனால் குறைவான இலக்கை வைத்தே இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இலக்கு எதுவாக இருந்தாலும் அதை வைத்து இந்தியாவை கட்டுப்படுத்த நாங்கள் சிறந்த முயற்சியை எடுப்போம். ஆனால் பிட்ச் நாளை எப்படி விளையாடுகிறது என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். அது கூர்மையாக திரும்புகிறது. அது சுழல், பவுன்ஸ் ஆகியவற்றில் சமமின்றி இருக்கிறது. ஒரு ஸ்பின்னராக இதுதான் எங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் விஷயங்களாகும். ஏனெனில் அதில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலாக இருக்கும். சொல்லப்போனால் பந்து இருபுறமும் திரும்புகிறது. எனவே பேட்டிங் செய்வது அங்கே கடினமாக இருக்கும்.

ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினார். அவருடைய ஆட்டம் எங்களை கொஞ்சம் பின் தங்க வைத்துள்ளது. இருப்பினும் சரியான இடத்தில் பந்து வீசி சரியான திட்டத்துடன் பீல்டிங் செய்தால் அவருடைய விக்கெட்டையும் எடுக்க முடியும். இந்திய ஸ்பின்னர்களும் நன்றாகவே பந்து வீசினார்கள். அதே போல நாங்களும் நன்றாக வளர்ந்துள்ளோம். எனவே போட்டியின் இந்த சூழ்நிலையில் எந்த திட்டத்தை பயன்படுத்தி வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்