அந்த இந்திய வீரருக்கு எதிராக திட்டங்கள் வைத்துள்ளோம் - இங்கிலாந்து பயிற்சியாளர்
|டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
கயானா,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அடைந்த படுதோல்விக்கு பழி தீர்க்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. மறுபுறம் கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதிபோல இம்முறையும் எளிதாக வெல்வோம் என்று கனவு காணவில்லை என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கூறியுள்ளார். ஏனெனில் தற்போது இந்திய அணி முன்னேறியுள்ளதாக தெரிவிக்கும் அவர் விராட் கோலிக்கு எதிராக திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நீண்ட காலமாக விராட் கோலி கிளாஸ் நிறைந்தவர் என்பதை நிரூபித்தவர். அவருக்கு எதிராக நாங்கள் திட்டங்களை வைத்துள்ளோம். அவர் எப்படி விளையாடுவார் என்பதையும் எந்தளவுக்கு அதிரடியாகவும் சாதுரியமாகவும் செயல்படுவார் என்பதையும் நாங்கள் அறிவோம். இந்தத் தொடரில் இதுவரை என்ன நடந்தது என்பது முக்கியமில்லை. இன்றைய போட்டியில் நாங்கள் மோதும் போது பெரிய வீரர்கள் பெரிய தருணத்தில் அசத்துவார்கள். எங்கள் வீரர்களைப் போலவே அவரும் அதை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.
கடந்த அரையிறுதியை விட தற்போது இந்தியா வித்தியாசமான அணியாக இருப்பதாக நாங்கள் விவாதித்துள்ளோம். கடந்த சில வருடங்களாக பவர் பிளே ஓவர்களில் அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள். ரோகித் சர்மா பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அணியை முன்னோக்கி நடத்துகிறார். அதேபோல எங்களுக்கு ஜோஸ் பட்லர். தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் நாக் அவுட் சுற்றுக்கு வருவதிலிருந்தே இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை புரிந்து கொள்ள முடியும். இது மகத்தான போட்டியாக இருக்கும்" என்று கூறினார்.