வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண்...இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே
|ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரசா மற்றும் சதாரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 115 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 29 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனுபவமில்லாத இந்த
இளம் இந்திய அணிக்கு, உள்ளூர் சாதகத்தை பயன்படுத்தி ஜிம்பாப்வே கடும் நெருக்கடி அளித்தது.
இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா அறிமுகன் ஆன முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து கெய்க்வாட் 7, ரியான் பராக் 2 துருவ் ஜூரெல் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய சுப்மன் கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதோடி இந்திய அணியின் வெற்றி கனவும் முடிவுக்கு வந்தது.
இறுதி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் போராடி பார்த்தும் பலனில்லை. 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 102 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரசா மற்றும் சதாரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.