துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் களமிறங்கும் விராட், ரோகித்..? வெளியான தகவல்
|இந்திய வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய அணி அடுத்து வங்காளதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் அந்த தொடரின் முதல் போட்டி தொடங்க உள்ளது. அந்தப் போட்டிக்கு முன் இந்திய வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் போட்டிகளில் ஆடுவதை நிறுத்திவிட்டனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதற்கு முன் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்தபோது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு கூறியதில்லை. ஆனால், தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீர் அனைத்து இந்தியர்களையும் உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு கூறி இருக்கிறார்.
இதனையடுத்து துலீப் டிராபியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை தவிர்த்து சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களும் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.