< Back
கிரிக்கெட்
விராட் கோலி மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவது போல தெரிந்தது ஆனால்... - ஸ்டீவ் ஸ்மித்

image courtesy; AFP

கிரிக்கெட்

விராட் கோலி மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவது போல தெரிந்தது ஆனால்... - ஸ்டீவ் ஸ்மித்

தினத்தந்தி
|
28 Dec 2024 7:39 AM IST

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் பண்ட் 6 ரன்னுடனும், ஜடேஜா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக அந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில், இது குறித்து ஸ்மித் கூறியதாவது, அது பெரிய தருணம். ஜெய்ஸ்வால் ஆம் என்று சொல்லி ரன் எடுக்க ஓடி வந்தார். விராட் அவரை திருப்பி அனுப்பினார். அது தான் அங்கே எளிதாக நடந்தது. அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்ததும் இன்னும் 2 விக்கெட்டுகள் எங்களுக்கு கிடைத்தது. அது நாளைய (இன்றைய) நாளில் எங்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கலாம்.

அந்த இருவருமே நன்றாக செய்ததாக தெரிந்தது. ஜெய்ஸ்வால் சுமாரான பந்துகளில் அதிரடியாக விளையாடினார். விராட் கோலி மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவது போல தெரிந்தது. ஏனெனில் அவர் மெதுவாக தனது ஆட்டத்தை துவங்கினார். அதனால் அவர்களில் ஒருவர் விக்கெட்டை நாங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் உடைந்ததும் மற்றொருவர் வேகமாக அவுட்டானது எங்களுக்கு நல்லதாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்