டி வில்லியர்ஸ்க்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி.. எதற்காக தெரியுமா?
|தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ்க்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம் பிடித்துள்ள ஏபி டிவில்லியர்ஸ்க்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
உங்கள் இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஹால் ஆப் பேம் என்பது விளையாட்டில் உங்கள் தாக்கத்தின் பிரதிநிதித்துவமாகும். இது உண்மையிலேயே தனித்துவமானது. மக்கள் எப்போதும் உங்கள் திறனைப் பற்றி பேசுகிறார்கள். நான் விளையாடியதில் நீங்கள் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். முழுவதிலும் நம்பர் ஒன் வீரர்.
நிறைய வீரர்கள் ஈர்க்கக்கூடிய எண்களைக் (ரன்கள்) கொண்டிருக்கலாம். ஆனால் மிகச் சிலரே பார்ப்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் வைத்திருக்கக்கூடிய மிக உயர்ந்த மதிப்பு அதுவே. அதுவே உங்களை மிகவும் சிறப்பானதாக்குகிறது.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.