கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை: பிளே ஆப் சுற்றில் தமிழக அணி போராடி தோல்வி
கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை: பிளே ஆப் சுற்றில் தமிழக அணி போராடி தோல்வி

தினத்தந்தி
|
9 Jan 2025 5:55 PM IST

தமிழக அணி பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தானுடன் மோதியது.

வதோதரா,

32-வது விஜய் ஹசாரே கோப்பை (50 ஓவர்) தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் குஜராத் (ஏ பிரிவு), மராட்டியம் (பி), கர்நாடகா, பஞ்சாப் (சி), விதர்பா (டி), பரோடா (இ) ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. 2-வது இடம் பிடித்த அரியானா (ஏ), ராஜஸ்தான் (பி), தமிழ்நாடு (டி), பெங்கால் (இ) ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி கண்டன.

இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்ற ஒரு பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு, ராஜஸ்தானை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற சூழலில் இரு அணிகளும் களமிறங்கின.

இதில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு அபிஜீத் தோமர் மற்றும் கேப்டன் லோமர் சிறப்பாக விளையாடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் இவர்கள் இருவரும் அபாரமாக விளையாடி அணி வலுவான நிலையை எட்ட உதவினர்.

தமிழக பந்துவீச்சில் 47.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த ராஜஸ்தான் 267 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஜீத் தோமர் 111 ரன்களும், லோமர் 69 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 268 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர் ஆன துஷார் ரஹெஜா 11 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமார் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் கை கோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 65 ரன்களிலும், பாபா இந்திரஜித் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் விஷய் சங்கர் - முகமது அலி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு கட்டத்தில் தமிழகம் வெற்றி பெறுவது போல் தெரிந்தது.

இருப்பினும் விஜய் சங்கர் (49 ரன்கள்), முகமது அலி (34 ரன்கள்) ஆட்டமிழந்ததும், தமிழகம் மீண்டும் தோல்வியின் பிடியில் சிக்கியது. பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.

வெற்றி பெற போராடிய தமிழக அணி 47.1 ஓவரில் 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ராஜஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் காலிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது. ராஜஸ்தான் தரப்பில் அமன் சிங் ஷெகாவத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஜீத் தோமர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.


மேலும் செய்திகள்