விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் - சண்டிகர் ஆட்டம் மழை காரணமாக ரத்து
|தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 26ம் தேதி உத்தரபிரதேசத்தை எதிர்கொள்கிறது.
விஜயநகரம்,
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று தொடங்கியது.
ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழகம் உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இதில் தமிழக அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சண்டிகர், மிசோரம், சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், விதர்பா ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இதில் தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று சண்டிகரை எதிர்கொள்வதாக இருந்தது.
இந்த ஆட்டம் விஜயநகரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்படுவதற்கு முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின்னர் போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக டாஸ் கூட சுண்டப்படாமல் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் அளிக்கப்பட்டது. தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 26ம் தேதி உத்தரபிரதேசத்தை எதிர்கொள்கிறது.