விஜய் ஹசாரே கோப்பை: ஜம்மு காஷ்மீர் அணியை வீழ்த்தி தமிழகம் அபார வெற்றி
|தமிழகம் தரப்பில் சி.வி. அச்சுத் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
விஜயநகரம்,
32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி, ஜம்மு காஷ்மீருடன் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழகம், ஜெகதீசனின் அபார சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் குவித்தது. ஜெகதீசன் 165 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 354 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணியால் தமிழகத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. வெறும் 36.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜம்மு காஷ்மீர் 162 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் தமிழக அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷுபம் கஜூரியா 45 ரன்கள் அடித்தார். தமிழகம் தரப்பில் சி.வி. அச்சுத் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.