கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி

image courtesy: PTI

கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி

தினத்தந்தி
|
21 Dec 2024 6:13 PM IST

கர்நாடகா தரப்பில் அதிகபட்சமாக கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்கள் குவித்தார்.

ஆமதாபாத்,

32-வது விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) இன்று தொடங்கியது. ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தின் உதவியுடன் 382 ரன்கள் குவித்தது. மேலும் அந்த அணியில் ஆயுஷ் மத்ரே (78 ரன்கள்), ஹர்திக் தாமோர் (84 ரன்கள்) மற்றும் ஷிவம் துபே (63 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதனையடுத்து 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கர்நாடக அணிக்கு மயங்க் அகர்வால் - நிகின் ஜோஸ் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். நிகின் ஜோஸ் 21 ரன்களிலும், மயங்க் அகர்வால் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் அதிரடியில் பட்டையை கிளப்ப கர்நாடக அணி எளிதில் வெற்றியை நோக்கி பயணித்தது. கார்நாடக பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை பவுலர்கள் திணறினர். 3-வது வரிசையில் இறங்கிய அனீஷ் 82 ரன்களில் ஆட்டமிழந்தார்.

46.2 ஒவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கர்நாடகா 383 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்களுடனும், பிரவீன் துபே 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மேலும் செய்திகள்