< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை; ஜெகதீசன் அபார சதம்... தமிழகம் 353 ரன்கள் குவிப்பு

image courtesy; @TNCACricket

கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை; ஜெகதீசன் அபார சதம்... தமிழகம் 353 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
28 Dec 2024 1:19 PM IST

தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 165 ரன்கள் எடுத்தார்.

விஜயநகரம்,

32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழ்நாடு, பெங்கால் உள்பட பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய இரு அணிகள் பிளே-ஆப் சுற்று மூலம் தேர்வாகும்.

இந்நிலையில், விஜயநகரத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டம் ஒன்றில் தமிழகம் - ஜம்மு காஷ்மீர் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜம்மு காஷ்மீர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் களம் இறங்கினர்.

இதில் துஷார் ரஹேஜா 7 ரன்னிலும், அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து பாபா இந்திரஜித் களம் இறங்கினர். ஜெகதீசன் - இந்திரஜித் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் இந்திரஜித் 78 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த விஜய் சங்கர் 25 ரன், முகமது அலி 37 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜெகதீசன் சதம் அடித்த நிலையில் 165 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் தமிழகம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 353 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 354 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு காஷ்மீர் ஆட உள்ளது.

மேலும் செய்திகள்