< Back
கிரிக்கெட்
டிராவிஸ் ஹெட் பும்ராவை சாதாரண பவுலராக நடத்துகிறார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட் பும்ராவை சாதாரண பவுலராக நடத்துகிறார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
25 Dec 2024 9:06 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரில அதிரடியாக ஆடி வரும் டிராவிஸ் ஹெட் இதுவரை 409 ரன்கள் அடித்துள்ளார். அதில் 2 சதங்களும் அடங்கும். இந்நிலையில் பும்ராவை சாதாரண பவுலர் போல டிராவிஸ் ஹெட் அடித்து நொறுக்கி வருவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பும்ராவுக்கு எதிராக ஹெட் இத்தொடரில் வெளிப்படுத்தும் செயல்பாடு அவருடைய பயமற்ற அணுகுமுறையை காண்பிக்கிறது. பும்ராவின் வித்தியாசமான ஆக்சன், கூர்மையான வேகம், துல்லியம் ஆகியவற்றுக்கு எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் டிராவிஸ் ஹெட் அவரை மற்றொரு சாதாரண பவுலராக நடத்துகிறார்.

அவருக்கு எதிராக அதிரடியாக விளையாடுவதால் ரன்கள் வருவது மட்டுமின்றி பும்ராவின் அச்சுறுத்தல் மற்றும் ரிதத்தையும் ஹெட் உடைக்கிறார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளை அடித்து நொறுக்கும் அவருடைய திறன் அற்புதமானது. அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களில் டிராவிஸ் மிகவும் முன்னேற்றமடைந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன்.

அதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டனாகவும் வருவதற்கு அவர் தகுதியானவர். டிராவிஸ் ஹெட்டின் தற்போதைய பார்ம் ஆஸ்திரேலியர்களின் வழக்கமான பேட்டிங் வழிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. காபா டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் செய்த போது என்னுடைய கண்களை தொலைக்காட்சியில் இருந்து எடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்