டி.என்.பி.எல்.: ஷாருக்கான் அரைசதம்... திண்டுக்கல் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த கோவை கிங்ஸ்
|கோவை கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 51 ரன்கள் அடித்தார்.
நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சுஜய் 8 ரன்களிலும், சுரேஷ் குமார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் - அரவிந்த் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதில் அரவிந்த் 25 ரன்களிலும், சுதர்சன் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன்பின் களமிறங்கிய ஷாருக்கான் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். வெறும் 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆதீக் உர் ரஹ்மான் 12 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் கோவை கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஷாருக்கான் 51 ரன்கள் குவித்தார். திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்க உள்ளது.