டி.என்.பி.எல்.: அனிருத் அதிரடி அரைசதம்... மதுரையை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி
|திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக பாலச்சந்தர் அனிருத் 52 ரன்கள் குவித்தார்.
கோவை,
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சசிதேவ் 41 ரன்கள் அடித்தார். திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் ராதாகிருஷ்ணன் 5 ரன்களிலும், துஷார் ரஹேஜா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய பாலச்சந்தர் அனிருத் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது அலி - சாய் கிஷோர் ஜோடி அணியை வெற்றி பெறவைத்தது.
வெறும் 18.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து திருப்பூர் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அனிருத் 52 ரன்களும், முகமது அலி 34 ரன்களும் அடித்தனர். மதுரை தரப்பில் அதிகபட்சமாக முருகன் அஷ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.