நாங்கள் செய்த தவறு இதுதான் - ரவி பிஷ்னோய் பேட்டி
|ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
ஹராரே,
ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 115 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 29 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை 102 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அசத்தினர். இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 31 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் சதாரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் இந்தியாவின் வெற்றிக்கான பொறுப்பை தங்களைப் போன்ற இளம் வீரர்களிடம் கொடுத்துள்ளதாக ரவி பிஷ்னோய் கூறியுள்ளார். இருப்பினும் முதல் போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைக்காததால் தோல்வியை சந்தித்ததாக தெரிவிக்கும் அவர் 2வது போட்டியில் இந்தியாவின் வெற்றி கொடியை மீண்டும் உயர்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"இது புது வீரர்களுக்கான நேரம். மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே கொடியை முன்னோக்கி எடுத்துச் செல்வது எங்களுடைய பொறுப்பு. சுப்மன் கில் கேப்டன்ஷிப் நன்றாகவே இருந்தது. அவர் பவுலிங் மாற்றங்களை சரியாக செய்தார். இங்கிருந்து நாங்கள் நன்றாக விளையாடி வலுவாக கம்பேக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
2-வது போட்டியில் நாங்கள் புத்துணர்ச்சியான மனதுடன் கம்பேக் கொடுக்க வேண்டும். முதல் போட்டியில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். ஒரு நல்ல 20 - 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். அதை செய்யாததே வெற்றியில் வித்தியாசம் ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே பவுலிங் மற்றும் பீல்டிங் துறையில் அசத்தினர் அவர்கள் எங்களை பார்ட்னர்ஷிப் அமைக்க விடவில்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக் கொள்கிறோம்" என்று கூறினார்.