டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியாவுக்கு இதுதான் தேவை - மைக்கேல் வாகன் கிண்டல்
|இந்தியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அடிலெய்டு,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டி வெறும் 2 1/2 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் டிராவிஸ் ஹெட் இப்படி இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அடிலெய்டு மைதானத்தில் 2 1/2 நாட்களில் போட்டி முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ள மைதான நிர்வாகம் அனுமதித்தது. அதன் காரணமாக ஏராளமான ரசிகர்கள் அடிலெய்ட் மைதானத்திற்குள் வந்து தங்களுடைய நேரத்தை செலவிட்டனர்.
அந்த புகைப்படத்துடன்"டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியாவுக்கு இந்த பீல்டிங்தான் தேவைப்படுகிறது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.