< Back
கிரிக்கெட்
இந்த போட்டியில் வெற்றி பெற பவுலர்களிடம் இதைத்தான் கூறினேன் - சுப்மன் கில் பேட்டி
கிரிக்கெட்

இந்த போட்டியில் வெற்றி பெற பவுலர்களிடம் இதைத்தான் கூறினேன் - சுப்மன் கில் பேட்டி

தினத்தந்தி
|
11 July 2024 8:56 AM IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஹராரே,

ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 3-வது ஆட்டம் ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 66 ரன்களும், கெய்க்வாட் 49 ரன்களும் அடித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ராசா, முஜரபானி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மயர்ஸ் 65 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கில் கூறுகையில், " இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி.

இந்த மைதானம் விளையாடுவதற்கு சற்று சவாலாக இருந்தது. அதிலும் குறிப்பாக புதுப்பந்தில் லென்த் பால்களை அடிப்பதில் மிகவும் சிரமம் இருந்தது. அதனையே நாங்கள் எங்களது பவுலர்களிடம் கூறினேன். பந்து பழையதாக மாற மாற எளிதாக ரன்களை குவிக்க முடிவதால் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசுமாறு கூறியிருந்தேன். இந்த போட்டியின் வெற்றியில் அனைவருமே பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி"என்று கூறினார்.

மேலும் செய்திகள்