13 வயது வீரரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்க காரணம் இதுதான்- கேப்டன் சஞ்சு சாம்சன்
|ஐ.பி.எல். மெகா ஏலத்தில் 13 வயதே ஆன இளம் வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுத்தது.
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்த மிக குறைந்த வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டியிட்டன. இதனால் இவரது விலை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திலிருந்து உயர்ந்து கொண்டே சென்றது.
முடிவில் ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.
அந்த சூழலில் சமீபத்தில் முடிவடைந்த ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடிய சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தலா ஐந்து பவுண்டரி மற்றும் சிக்சர் என குறைந்த பந்துகளிலேயே 67 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதில் அவர் அடித்த சிக்சர்கள் எல்லாம் தொலைதூரம் பறந்தன.
இதனால் அவரை ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்தது சரிதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்துள்ளேன். அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தேர்வாளர்கள் சென்னையில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்டோர் போட்டியை நேரில் பார்த்தனர். அந்த போட்டியில் விளையாடிய சூர்யவன்ஷி சதம் அடித்திருந்தார்.
அவர் அடித்த சதத்தை விட அவர் விளையாடிய ஷாட்கள்தான் அவரை சிறந்த வீரராக எங்களது அணியின் நிர்வாகிகளுக்கு காட்டி இருக்கிறது. அதன் காரணமாகவே அவர்கள் வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியுள்ளனர். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல் போன்ற வீரர்களை மிக இளம் வயதிலேயே அணிக்குள் கொண்டு வந்து அவர்களை தற்போது இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு முன்னேற்றியுள்ளது.
அந்த வரிசையில் தற்போது வைபவ் சூர்யவன்ஷியை மிக இளம் வயதிலேயே கண்டெடுத்துள்ளது. ஐபிஎல் தொடரை வெல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்திய அணிக்கு தரமான வீரர்களை அனுப்பவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செயல்களை மேற்கொண்டு வருகிறது" என்று கூறினார்.