பும்ரா சிறப்பாக செயல்பட காரணம் இதுதான் - ஸ்டார்க் பாராட்டு
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்களில் 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 27 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் இருந்தது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (19 ரன்), மிட்செல் ஸ்டார்க் (6 ரன்) களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் பும்ரா தான் வீசிய முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரியை வீழ்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து தடுமாறி வரும் ஆஸ்திரேலியா தற்போது வரை 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் அடித்துள்ளது.
முன்னதாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார், பும்ராவை பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஒருவேளை அவருடைய முழங்கை மற்றும் வித்தியாசமான பந்துவீசும் ஆக்சன் அவருக்கு நிறைய செயல்களை வழங்கலாம். அதைப் பயன்படுத்தி அவர் நீண்ட காலமாக அனைத்து பார்மட்டிலும் சிறந்த பவுலராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இன்று அவர் வெளிப்படுத்திய திறமைகள் பும்ரா எந்தளவுக்கு சிறப்பானவர் என்பதை மீண்டும் காட்டியுள்ளது.
அவர் பந்தை ரிலீஸ் செய்யும் விதத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதுவே அவருடைய செயலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அது பலரால் செய்ய முடியாத ஒன்று. அதை நிச்சயமாக நான் முயற்சிக்கப் போவதில்லை. ஏனெனில் அதை முயற்சித்தால் நான் ஒருவேளை காயமடையலாம்" என்று கூறினார்.