டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் தடுமாற காரணம் இதுதான் - கம்பீர் விளக்கம்
|டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் வெற்றிகரமாக விளையாடும் வீரர்தான் முழுமையான கிரிக்கெட்டர் என்று கம்பீர் கூறியுள்ளார்.
மும்பை,
இந்தியா - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, 2-வது போட்டியிலும் தோல்வியடைந்ததால் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது.
அந்த தோல்விகளுக்கு நியூசிலாந்து பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக முதல் போட்டியில் வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா, 2வது போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் 156க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்திக்க பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமானார்கள்.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் விழும் போது எப்படி நிதானத்துடன் தடுப்பாட்டம் விளையாட வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அதிகமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாலேயே டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இருப்பினும் வருங்காலத்தில் அதை முன்னேற்றுவதற்கான வேலையை செய்து வருவதாகவும் கம்பீர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "உலகம் முழுவதிலும் நிறைய டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் அதிகமாக விளையாடுவதாலேயே வீரர்கள் தங்களுடைய தடுப்பாட்டத்தில் தடுமாறுகிறார்கள். ஆனால் வெற்றிகரமான வீரர்கள் எந்த பார்மட்டாக இருந்தாலும் வலுவான தடுப்பாட்டத்தை கொண்டிருப்பார்கள். எனவே தடுப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நாங்கள் எங்கள் வீரர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதற்காக கடினமாகவும் உழைத்து வருகிறோம். எனவே அதனுடைய முடிவை நம்மால் பார்க்க முடியும்.
உண்மையில் டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் வெற்றிகரமாக விளையாடும் வீரர்தான் முழுமையான கிரிக்கெட்டர். ஆனால் வருங்காலத்தில் நமது அணியில் மட்டுமின்றி உலகின் பல்வேறு அணிகளிலும் இந்த பிரச்சினையை பார்க்க முடியும். ஏனெனில் நீங்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடும்போது குறைவான வீரர்கள் மட்டுமே தடுப்பாட்டத்தை விளையாடுவதை பார்க்க முடியும்" என்று கூறினார்.