< Back
கிரிக்கெட்
பும்ரா பந்துவீச்சை அடிக்க ஒரே வழி இதுதான் - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாண்டிங் அட்வைஸ்
கிரிக்கெட்

பும்ரா பந்துவீச்சை அடிக்க ஒரே வழி இதுதான் - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாண்டிங் அட்வைஸ்

தினத்தந்தி
|
5 Dec 2024 7:57 PM IST

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்கு பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.

முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார். வித்தியாசமான ஆக்சனை பயன்படுத்தி துல்லியமாக பந்து வீசும் பும்ராவை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக ஸ்டீவ் சுமித் போன்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களே பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் பும்ராவுக்கு எதிராக விக்கெட்டை விடாமல் விளையாடினால் போதும் என்று நினைக்காமல் எப்படியாவது அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட வேண்டுமென ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதுவே அடுத்த போட்டிகளில் பும்ராவை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வதற்கான வழி என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நானாக இருந்தால் ஒவ்வொரு பந்திலும் அவருக்கு எதிராக இறங்கி சென்று அவருடைய தலைக்கு மேல் பந்தை அடிப்பேன். இப்படி சொல்வது நகைச்சுவையாக இருக்கும். ஆனால் நான் அவருக்கு எதிராக சுறுசுறுப்பாக இருக்கவும் அழுத்தத்தை கொடுக்கவும் முயற்சிப்பேன். ஏனெனில் மிகவும் சிறந்த பவுலரான அவர் உங்களை ரன்கள் குவிக்க விடமாட்டார்.

உண்மையில் சிறந்த பவுலர்கள் எப்போதும் எதிரணி பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விட மாட்டார்கள். அதே போல சிறந்த பேட்ஸ்மேன்கள் எப்போதும் சிறந்த எதிரணி பவுலர்களை நன்றாக பந்து வீச விட மாட்டார்கள். இப்படித்தான் நான் பும்ராவை அணுகுவேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்