இந்த தோல்வியிலிருந்து இந்திய தேர்வுக்குழுவினர் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் - மஞ்ரேக்கர்
|இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
மும்பை,
நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 - 0 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது.
இந்த தோல்விக்கு விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய சீனியர்கள் சிறப்பாக விளையாடாதது முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததே காரணம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
கடந்த துலீப் கோப்பை தொடரில் விராட் மற்றும் ரோகித் விளையாடுவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தொடர் நெருங்கும் வேளையில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்தது. இருப்பினும் அவர்கள் துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். தற்போது அவர்கள் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சொதப்பியதால் உள்ளூர் தொடரில் விளையாடததே காரணம் என்று மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நட்சத்திர சீனியர் வீரர்களுக்கு உள்ளூர் தொடரில் விளையாடுவதிலிருந்து ஓய்வு கொடுக்கும் கொடுத்த தேர்வுக்குழுவுக்கு நியூசிலாந்து நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "ஏற்கனவே ஓய்வெடுத்த வீரர்களுக்கு அந்தஸ்து காரணமாக ஓய்வு கொடுக்கக் கூடாது என்பதே இந்த தோல்வியிலிருந்து தேர்வுக்குழுவினர் கற்றுக்கொண்ட பெரிய பாடமாகும். ரோகித், கோலி ஆகியோர் துலீப் கோப்பையில் விளையாடியிருந்தால் மட்டுமே நல்ல பயனை பெற்றிருப்பார்கள் என்று நான் மீண்டும் சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.