< Back
கிரிக்கெட்
கம்பீருக்கு நான் வழங்கும் அறிவுரை இதுதான் - ரவி சாஸ்திரி
கிரிக்கெட்

கம்பீருக்கு நான் வழங்கும் அறிவுரை இதுதான் - ரவி சாஸ்திரி

தினத்தந்தி
|
22 Nov 2024 9:08 AM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீருக்கு, ரவி சாஸ்திரி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

மும்பை,

ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக 2 கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன் 2024 சீசனில் ஆலோசகராக செயல்பட்ட அவர் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர்.

அதன் காரணமாக டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பின் கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. அதனால் முதல் சுற்றுப்பயணத்திலேயே கம்பீர் சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து வங்காளதேசத்துக்கு எதிராக 2 - 0 (2 போட்டிகள்) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்தியா வென்றது. ஆனால் அதன்பின் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதனால் கம்பீர் மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வெற்றி பெறவில்லையெனில் டெஸ்ட் போட்டிக்கான தலைமை பயிற்சியாளர் பதவி பறிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

முன்னதாக ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு கவுதம் கம்பீர் பதில் கூறியிருந்தது சமூக வலைதளத்தில் பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்க கம்பீருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கவுதம் கம்பீருக்கு நான் வழங்கும் முதல் அறிவுரை அமைதியாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் சத்தங்கள் அவரை எந்த நிலையிலும் பாதிக்க கூடாது. உங்கள் வீரர்களை புரிந்து கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலையிலும், உள்ளூரிலும், வெளிநாட்டிலும் அவர்கள் விளையாடுவதை பார்ப்பீர்கள். அப்போது ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவதற்கு என்ன தேவை என்பது உங்களுக்கு தெரியும். அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட சில வீரர் மற்றவர்களை விட நன்றாக செயல்படுவார் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

ஆரம்பத்தில் இந்திய வீரர்களை புரிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. வீரர்கள் வெவ்வேறு கலாச்சார பின்னணி மற்றும் மனநிலைகளில் இருந்து வருகிறார்கள். எனவே அவர்களை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களை வெளியில் தள்ளி நம்பிக்கை கொடுத்தால் மேட்ச் வின்னர் ஆக கொண்டு வர முடியும். உங்களால் தொடரை வெல்ல முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்