இது ஐ.பி.எல். கிடையாது.. பாண்டிங் விஷயத்தில் கம்பீருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆதரவு
|விராட் கோலியின் பார்ம் குறித்து பேசிய விஷயத்தில் கம்பீர் - பாண்டிங் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் 5 வருடத்தில் 3 சதங்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். எனவே விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்
இது குறித்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பாக தலைமை பயிற்சியாளரான கம்பீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கம்பீர், "இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்?. விராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் அசத்துவார்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து யோசித்தால் போதும்" என்று காட்டமாக பதிலடி கொடுத்தார். அவரது இந்த கருத்து பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதற்கு பாண்டிங் பதிலளித்தார். மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களான ஹெய்டன், பிராட் ஹாடின், கில்கிறிஸ்ட், டிம் பெய்ன் போன்றவர்கள் கம்பீரை விமர்சித்தனர்.
இந்நிலையில் நாட்டுக்காக விளையாடும் இந்தத் தொடரில் கவுதம் கம்பீர் தம்முடைய அணி வீரருக்கு ஆதரவாக அவ்வாறு சொன்னதில் எந்த தவறுமில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இப்போதெல்லாம் நீங்கள் எதிரணி வீரர்களுடன் அதிகமான நேரத்தை செலவிடுகிறீர்கள். அதனால் விஷயங்கள் கடினமாகின்றன. நான் ஐ.பி.எல். தொடரில் விளையாடியபோது அல்லது அதற்கு முன் இது மிகவும் எளிதாக இருந்தது. அப்போதெல்லாம் வீரர்கள் ஒரே அணியில் இருக்க மாட்டார்கள். அந்த காரணத்தால் இப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சில வெற்றிகளை பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். களத்தில் நாம் நண்பர்கள் இல்லை. களத்திற்கு வெளியே நண்பர்களாக இருப்பது பரவாயில்லை.
ஆனால் களத்தில் நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள். ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்காக விளையாடவில்லை. அந்த அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினரும் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இவை அனைத்தும் ஸ்லெட்ஜிங் செய்வதை பற்றியது மட்டுமல்ல. வெற்றிக்காக போராடுவது உங்களுடைய எண்ணம் மற்றும் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியும் அதே சூழ்நிலையில் இல்லையெனில் நான் ஆச்சரியப்படுவேன். அந்த அணுகுமுறை இந்த தொடரை சிறப்பாக விளையாட உதவும். அதே எண்ணத்துடன் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் களத்தில் வெற்றிக்காக போராடுவார்கள். போராடுவதை நீங்கள் காண்பீர்கள்" என்று கூறினார்.