< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் சாம்சன் பேட்டி
கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் சாம்சன் பேட்டி

தினத்தந்தி
|
9 Nov 2024 3:12 AM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

டர்பன்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வெறும் 17.5 ஓவர்களிலேயே 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 61 ரன்களில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த சஞ்சு சாம்சன் தனது அதிரடியான ஆட்டம் குறித்து பேசுகையில், "உண்மையிலேயே நான் இன்று விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளில் முடிந்த அளவுக்கு ரண்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இன்றைய நாள் எனக்கு சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்து ரன்களை குவிக்க முயற்சித்தேன்.

எப்பொழுதுமே ஒரு வீரர் 3-4 பந்துகள் களத்தில் நின்றால் அடுத்து பவுண்டரி அடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. நல்ல பந்து கிடைத்தால் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இன்று என் ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்தது. தென் ஆப்பிரிக்க அணி தங்களுக்கு சாதகமான சொந்த மண்ணில் விளையாடுவதால் பலமான அணியாக இருக்கிறது. இருந்தாலும் அவர்களை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி" என்று கூறினார்.

மேலும் செய்திகள்